பல நாட்களாக “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டே இருந்தது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். “புதிய கீதை” திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா, விஜய்யுடன் இணைந்துள்ளார். ஆதலால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய், இதற்கு முன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வேறு ஒரு திரைப்படத்திற்காக பாடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 1998 ஆம் ஆண்டு ஜெ.சுரேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வேலை”. இத்திரைப்படத்தில் விக்னேஷ், இந்திரஜா, நாசர் போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் “காலத்துக்கேற்ற ஒரு கானா” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலை நடிகர் விஜய்தான் பாடியுள்ளார். மேலும் விஜய்யுடன் இணைந்து நாசர், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் பாடியுள்ளனர். “தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள நிலையில் தற்போது இத்தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருந்தே தான் நடிக்கும் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். “இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்” என்ற டைட்டிலுடன் அப்பாடல்கள் ஒளிபரப்பப்படும். அவர் பாடிய பாடல் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் பாடல்களாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் “தளபதி 68” குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. வருகிற ஜூலை மாதம் “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.