விஜய் சேதுபது தற்போது இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “விடுதலை” முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாராக மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாது, வில்லனாகவும் நடித்து வருபவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். “விக்ரம் வேதா”, “பேட்ட”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். எனினும் சமீப காலமாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. “மாமனிதன்”, “டி எஸ் பி” ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆதலால் இனி விஜய் சேதுபதி கொஞ்ச காலம் ஹீரோ கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிப்பதாக முடிவு எடுத்துள்ளார் எனவும் சில தகவல்கள் வெளிவந்தன.
விஜய் சேதுபதி திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்துகொண்டே இருப்பது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்தளவுக்கு பல திரைப்படங்களில் நடித்து குவித்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு குறைந்தது 7 திரைப்படங்களிலாவது நடித்துவிடுகிறார் என்றால் பாருங்கள்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த ஒரு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அத்திரைப்படத்தின் பெயர் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. விரைவில் இத்திரைப்படம் வெளிவரும் என அதில் அறிவிப்பும் இருந்தது.
விஜய் சேதுபது இப்படி ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்று பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இத்திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பே படமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் தள்ளிப்போனது. இந்த நிலையில்தான் தற்போது இத்திரைப்பம் வெளிவர தயாராக உள்ளது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் மறைந்த காமெடி நடிகர் விவேக்கும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.