விஜய்யின் மகனான சஞ்சய் விஜய் “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். அப்போது அவருக்கு சிறு வயதுதான். அதன் பின் தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் வெளிநாட்டில் பிலிம் டெக்னாலஜி படிக்கச் சென்றார். தற்போது அவர் படிப்பை முடித்துள்ள நிலையில் சஞ்சய் திரைத்துறையில் எப்போது நடிகராக அறிமுகமாவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் சஞ்சய் வேறு விதமாக யோசித்தார். அதாவது அவருக்கு நடிப்பதில் இஷ்டமில்லை. அதற்கு மாறாக சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்பதில்தான் ஈடுபாடு இருப்பதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து சஞ்சய் எப்போது இயக்குனராக களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது சஞ்சய் விஜய், தனது வெளிநாட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தின் பெயர், “புல் தி டிரிக்கர்”. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே உருவாகியிருக்கும் இக்குறும்படம், ஒரு பயங்கரமான ஆக்சன் குறும்படமாக வெளியாகியுள்ளது.
13 நிமிடங்கள் நீளம் கொண்ட இக்குறும்படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தாலும், இப்போதும் இக்குறும்படத்தை பலரும் பார்த்து சிலாகித்து வருகின்றனர். மேலும் சஞ்சய் விஜய்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இக்குறும்படம் இதோ…
சஞ்சய் விஜய்யிடம் ஒரு நாள் எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய்யை வைத்து படம் இயக்க ஆசையா?” என கேட்டாராம். அதற்கு சஞ்சய் விஜய், “எனக்கு விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவேண்டும்” என கூறினாராம். ஆதலால் விரைவில் விஜய் சேதுபதியை வைத்து சஞ்சய் விஜய் ஒரு திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.