சீயான் விக்ரமின் நடிப்பாற்றலை குறித்து நாம் தனியாக கூறத்தேவையே இல்லை. கமல்ஹாசனுக்கு அடுத்து எந்த தோற்றத்திற்கும் பொருந்தி நடிக்கக்கூடியவர் சீயான் விக்ரம்தான். சமீபத்தில் கூட “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருந்தார் விக்ரம்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சீயான் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கே.ஜி.எஃப் பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் விக்ரமின் கெட்டப் ரசிகர்களை அசரவைத்துள்ளது. சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளின்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான மேக்கிங் வீடியோ வெளிவந்தது. இதில் படக்குழுவினரின் உழைப்பு பார்வையாளர்களை பிரம்மிக்கவைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டு அவரது விலா எழும்பில் பாதிப்பு ஏற்பட்டது. ஆதலால் சில காலம் அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விக்ரமின் தீவிர ரசிகரான சிவா என்பவர் அவரது இல்லத்திற்கு சென்று கேட் அருகில் கையில் ஒரு பதாகையை பிடித்து நின்றபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதாகையில், “சீக்கிரம் குணமாகி வாருங்கள். Lots of Love” என்று எழுதப்பட்டிருந்தது. தனது புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் சிவா பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம், சிவாவின் டிவிட்டை பகிர்ந்து, “மிக்க நன்றி சிவா. வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்கு. நீங்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும். I’ll be back” என குறிப்பிட்டிருக்கிறார்.