“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் தற்போது எங்கு திரும்பினாலும் “தளபதி 68” குறித்த பேச்சுக்களாகவே இருக்கின்றன. முதலில் அட்லீ இயக்குவதாக கூறப்பட்ட திரைப்படம் அதன் பின் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்குவதாக கூறப்பட்டது.
இப்போது “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவல் ஓரளவு உண்மைக்கு நெருக்கமான தகவல்தான் என கூறுகிறார்கள். ஆதலால் விஜய் ரசிகர்கள் சற்று உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.
இதற்கு முன் விஜய் நடித்திருந்த “சிவகாசி” திரைப்படத்தில் வெங்கட் பிரபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “மங்காத்தா” திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜய், வெங்கட் பிரபுவையும் பிரேம்ஜியையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தாராம். “மங்காத்தா படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரத்திற்கு என்னை அழைத்திருந்தால் நான் நடித்திருப்பேன்” என கூறினாராம். இதனை கேட்டு வெங்கட் பிரபு ஷாக் ஆகிவிட்டாராம்.
இவ்வாறு அவ்வப்போது வெங்கட் பிரபு விஜய்யை சந்தித்திருந்தாலும் அவ்வளவு நெருக்கம் இல்லை என அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது விஜய் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக தகவல் வருகிறது.
வெங்கட் பிரபு திரைப்படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் பிரேம்ஜியும் நிச்சயம் இருப்பார்கள். யுவன் ஷங்கர் ராஜாவும் வெங்கட் பிரபுவும் உறவுக்காரர்கள் என்றாலும் அவர்களுக்குள் ஒரு ஒத்திசைவான அலைவரிசை இருக்கிறது. இருவரும் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களிலும் பாடல்கள் ஹிட் அடித்திருக்கின்றன. குறிப்பாக “மங்காத்தா” திரைப்படத்தில் பின்னணி இசையில் மாஸ் காட்டியிருந்தார் யுவன்.
இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்திலும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது “தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை என கூறப்படுகிறது. மாறாக அனிருத் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரேம்ஜி அமரனும் இத்திரைப்படத்தில் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடித்த “புதிய கீதை” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.