வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
தண்டவாளங்களைக் கடக்கும்போது, வேகமாக வரும் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கின்றன. அந்தப் பகுதியில் மலை, பாறை, வளைவு எனப் பல சிக்கல்கள் இருக்கின்றன.அந்த மாதிரியான இடங்களில் யானையால் எளிதில் கடக்க முடியாது. ரயில் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறிய பிறகு, குறிப்பிட்ட சில ரயில்களுக்கு மட்டுமே வேகத்தைக் குறைத்தனர். மற்ற ரயில்கள் எப்போதும் போல வேகமாகத்தான் செல்கின்றன.
இந்நிலையில் மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன்ஜங்கா ரயில் வேகமாக மோதியது.
காட்டு யானை ரயிலில் அடிபட்டது தொடர்பான, கண் கலங்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.யானை துடிதுடித்து இறக்கும் காட்சி பலரை கண்கலங்க செய்ய வைத்துள்ளது.
இதை பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறுகையில், இந்திய வனஉயிரின சட்டப்படி அட்டவணை 1ல் உள்ள விலங்காக யானை உள்ளது. நாட்டின் உயிர்ச்சூழலை பாதுகாப்பதில் யானை முக்கியப் பங்கு வகிப்பதால் யானையைக் காப்பாற்றுவது என்பது அரசின் கொள்கையாகவும் உள்ளது. சூழலியல் பார்வையிலும் அது மிகவும் முக்கியமானது. ஆனால், இவ்வாறு ரயிலில் அடிபட்டு இறப்பது என்பது மிகவும் வேதனையானது” என்றார்.