கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வேலுார், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னைக்கு காரில் செல்வதற்கு 6 முதல் 7 மணி நேரமும், பஸ்சில் சென்றால் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். ரயிலில் சென்றால், 6 மணி நேரம் ஆகிறது.
இந்நிலையில், பெங்களூரு — சென்னை நகரங்களை இணைக்கும் வகையில் 17,930 கோடி ரூபாய் செலவில் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2022-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டில் இருந்து துவங்கும் சாலை, கர்நாடகாவின் மாலுார், பங்கார்பேட்டை, தங்கவயல், பேத்தமங்களா, ஆந்திராவின் வெங்கடகிரி கோட்டா, பலமனேர், பங்காருபலேம், சித்துார்.தமிழகத்தின் ராணிபேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் வழியாக ஸ்ரீபெரும்புதுாரில் முடிகிறது.
மொத்த துாரம் 258 கி.மீ. ஆகும். இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இரு நகரங்களையும் இரண்டு மணி நேரத்தில் கடந்து விடலாம் என கருதப்படுகிறது. சாலைப் பணிகள், 2024 மார்ச்சில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், பெங்களூரு — சென்னை அதிவிரைவு சாலை பயன்பாட்டுக்கு வரும் என்றும், பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனவும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.