Homeஇந்தியாபெங்களூரில் மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பதாக தகவல்.

பெங்களூரில் மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பதாக தகவல்.

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் நாய் இறைச்சியை விற்பதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறை இணைந்து கேஎஸ்ஆர் சிட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடை 8 இல் நாய் இறைச்சி இருப்பதாக புகார் சொல்லப்பட்டது. தொடக்கத்தில் சுமார் 5,000 கிலோ இறைச்சி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. பிறகு அதிகாரிகள் சோதனையிட்டதில் 150 பெட்டிகளில் சுமார் 1,500 கிலோ இறைச்சி இருப்பது தெரியவந்தது.

உணவுப் பிரிவு அதிகாரிகள் அந்த இறைச்சியின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த இறைச்சி எங்கிருந்து வந்தது, அனுப்பியவரிடம் உரிய உரிமம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியை கொடுக்கின்றன. “பெங்களூரில் ஒரு கிலோ மட்டன் சராசரியாக ரூ.750 – 800க்கு விற்பனையாகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக சிலர் மட்டன் இறைச்சி ஒரு கிலோ ரூ.550 – 600 என்று விற்பனை செய்தனர். அப்போதே சந்தேகம் வந்தது.

இந்நிலையில், கர்நாடகா உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஶ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டிருப்பது நாய் இறைச்சி இல்லை. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அதிகம் வளர்க்கப்படும் சிரோஹி என்ற சிறப்பு ரக ஆட்டின் இறைச்சி. அதன் வால் பகுதி சற்று நீளமானதாகவும், உடலில் ஆங்காங்கே புள்ளிகளும் காணப்படும். இதனால் மக்கள் அது நாய் என்று குழம்பிவிடுகிறார்கள். இதில் நாய் இறைச்சி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பெங்களூரில் மட்டன் சப்ளை குறைவாக இருப்பதால், சில வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து இந்த ஆட்டு இறைச்சியை வாங்கி அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்கிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

சற்று முன்