மும்பையில் கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற பெண் ஆன்லைனில் யம்மோ பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்துள்ளது. ஆவலுடன் ஐஸ்கிரீமை திறந்து பார்த்தபோது அதனுள் மனித விரல் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக யம்மோ ஐஸ்கிரீம் நிறுவனம் மீது மலாட் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று விசாரணை நடத்தினர். ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.