Homeஇந்தியாகுஜராத்தில் அதிரடியாக நான்கு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

குஜராத்தில் அதிரடியாக நான்கு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

நீட் தேர்வில் நடந்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடைசி நேரத்தில், முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 29) ‘நீட்’ தேர்வு மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆமதாபாத், கெடா மற்றும் கோத்ரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. கோத்ராவில் பலருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சோதனையின் போது 10-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை சிபிஐ நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. அங்குள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் எஹ்சானுல் ஹக் என்பவர் ஹசாரிபாக் நகரில் நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் பார்வையாளராகவும், ஒயாசிஸ் பள்ளியில் மைய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். வினாத்தாள் கசிவு தொடர்பாக ஹசாரிபாக் மாவட்டத்தில் மட்டும் 5 பேரை பிடித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்