குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு 12 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.. நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும். இது முதன்முதலில் 1965இல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இது சண்டிபுரா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் அதிகம் குழந்தைகளிடையே தான் பரவும்.
இந்த நோய் வெக்டார்- பாதிக்கப்பட்ட ஒரு வகையான மணல் பூச்சி கடிப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது முக்கியமாக 9 மாதங்கள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைப் பாதிக்கிறது. இது கிராமப் புறங்களில் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல், வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
சண்டிபுரா வைரஸ் ஒரு தீவிர நோய்க்கிருமியாகும்.. இருப்பினும், கொரோனா போல இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது. இதற்குக் குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் இல்லை. எனவே, எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெறுகிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
திடீரென காய்ச்சல் அதிகரிக்கும்.. கடுமையான தலைவலி ஏற்படும். அடிக்கடி வாந்தி வரலாம். வலிப்பு ஒரு முக்கிய அறிகுறியாகும். குழப்பம், எரிச்சல் மற்றும் நினைவு கூட தப்பும். சில நேரங்களில் கோமாவுக்கு கூட தள்ளப்பட்டு மரணம் கூட ஏற்படலாம். சண்டிபுரா வைரஸ் sandflies எனப்படும் மணல் ஈக்கள் கடிப்பதால் தான் அதிகம் பரவுகிறது. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.