மகாராஷ்டிரா அரசு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் டிப்ளமோ மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கும் உதவித் தொகையை அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆஷாதி ஏகாதசி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்படி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 8,000 வழங்கப்படும். பட்டதாரி மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 10,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகையான ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும்.
இதைக் கொண்டு மாணவர்கள் தங்கள் அடுத்தகட்ட உயர் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான தயாரிப்புகளில் ஈடுபட முடியும். 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
முக்கிய மந்திரி யுவ கார்ய பிரஷிக்ஷான் யோஜனா திட்டம் திறன் பயிற்சியை வழங்குவதையும், வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் திறமைக்கும், வேலை அளிக்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் படிக்கும் போதே அவர்களது திறன்களை வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநில பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட இதர நலத் திட்டங்களுக்கு மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்கு சுமார் ரூ.10,000 கோடி செலவாகும் என்றும் கூறப்படுகிறது.