- Advertisement -
இந்தியா

மக்களவையின் முதல் கூட்டம் இன்று ஆரம்பம்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். வரும் 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது.

27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார். அதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 28-ம் தேதி விவாதம் தொடங்கும். விவாதத்திற்கு பதிலளித்து ஜூலை 2 அல்லது 3-ம் தேதி பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இரு அவைகளுக்கும் சற்று இடைவேளை விடப்படும். ஜூலை 22-ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காலையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக மகதாப் பதவியேற்பார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின், பாராளுமன்றத்திற்கு வரும் மகதாப், 11 மணிக்கு மக்களவையை கூட்டுவார்.

புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சபையை வழிநடத்துவார். இந்த கூட்டத்தொடரில் இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பான பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என தெரிகிறது. அதாவது, இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் அந்த பதவிக்கு உரிமை கோரியதை அரசாங்கம் பரிசீலனை செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றன. மகதாப் 7 முறை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இடைக்கால சபாநாயகர் பதவிக்கு தகுதியானவர் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் 1989, 1991, 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், 1998 மற்றும் 2004 தேர்தல்களில் தோல்வியடைந்தார் என்ற தகவலையும் அவர் கூறியிருக்கிறார். இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்குமா அல்லது தங்களின் உரிமை மறுக்கப்பட்டதாக கூறி அமளியில் ஈடுபடுமா? என்பது இன்று காலை தெரிந்துவிடும்.

இதற்கிடையே, இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்படாத கொடிக்குன்னில் சுரேஷுக்கு, மக்களவை தலைவர்கள் குழுவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 26-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும் வரை அவை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இடைக்கால சபாநாயகருக்கு உதவ கொடிகுன்னில் சுரேஷ் (காங்.), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ராதா மோகன் சிங் (பா.ஜ.க.), பக்கன் சிங் குலாஸ்தே (பா.ஜ.க.) மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோரை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts