Homeஇந்தியாமுக்கியமான 5 பிரச்சனைகளை மக்களவையில் பேசவில்லை. மல்லிகார்ஜுன காக்கே குற்றச்சாட்டு.

முக்கியமான 5 பிரச்சனைகளை மக்களவையில் பேசவில்லை. மல்லிகார்ஜுன காக்கே குற்றச்சாட்டு.

18வது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இது குறித்து எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

மோடி அரசு எழுதிக் கொடுத்த குடியரசுத் தலைவர் உரையைக் கேட்டேன், அதன் மூலம், பிரதமர் மோடி, மெய்மறந்த நிலையில் இருப்பதாக உணர்கிறேன். இந்த நாட்டு மக்கள், அவரது 400க்கும் கூடுதலான இடங்கள் என்ற முழக்கத்தை நிராகரித்துவிட்டனர், அதுமட்டுமல்லாமல், அந்த எண்ணை விட வெகு தொலைவில் 272 என்ற எண்ணில் வைத்துவிட்டார்கள். இது மோடிக்கு எதிரானதுதான். ஆனால், பிரதமர் மோடியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மோடி எதுவும் மாறவில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார், ஆனால், உண்மை என்னவென்றால், இந்த நாட்டின் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

மாநிலங்களவையில் எனது உரையின் முழு விவரத்தையும் இங்கு அளிக்கிறேன், அதாவது, கடந்த 5 ஆண்டுகளில், தேசிய தேர்வு முகமை நடத்திய 66 தேர்வுகளில், வினாத்தாள் கசிவு, முறைகேடு நடந்தது என 12 தேர்வுகள் மீது புகார்கள் எழுந்துள்ளது. இதனால் 75 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாங்கள் பிரிவினைவாத அரசியல் செய்வதாகக் கூறிவிட்டு, மோடி அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பி ஓட முடியாது, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீதி கேட்கிறார்கள், இதற்கு மத்திய கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும், ஒவ்வொரு இரண்டு இளைஞர்களில் ஒருவர் வேலையின்றி இருக்கிறார், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான எந்த தகவலும் குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.

ஒட்டுமொத்த உரையிலும், ஐந்து முக்கிய பிரச்னைகள் பேசப்படவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், பயணிகள் ரயில்கள் உள்பட நாட்டில் நிகழும் பயங்கர ரயில் விபத்துகள், ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு போன்ற ஐந்து முக்கிய பிரச்னைகள் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, கடந்த மக்களவைத் தேர்தலில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பொய்களை எல்லாம், கடைசியாக ஒரு முறை நாடாளுமன்றத்தில் சொல்லி சில கைதட்டல்களையாவது பெறலாம் என்று மோடி அரசு முயன்றுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சற்று முன்