Homeஇந்தியா71 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது எதற்கு தெரியுமா?

71 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது எதற்கு தெரியுமா?

வெங்காயம், தக்காளி போன்ற அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருட்களின் சில்லறை விலை உயர்வு காண்பது, சாமானியர்களின் அன்றாடங்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். இந்த பொருட்களின் விலை உயர்வு அதனையொத்த இதர பொருட்களின் விலை உயர்வுக்கும் வழி வகுக்கச் செய்யும். இந்த தடுமாற்றங்களை தவிர்க்க, வெங்காயத்தை வாங்கி இருப்பில் வைக்க மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் இதுவரை 71,000 டன் வெங்காயத்தை தாங்கல் இருப்புக்காக அரசாங்கம் வாங்கியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழையை வரவேற்கும் வகையில் சில்லறை விலைகள் குறையும் என்று எதிர்பார்ப்பு நிலவியபோதும், எதிர்பாரா விலை உயர்வு மற்றும் விளைச்சல் குறைவு சிக்கல்களை எதிர்க்கொள்ளவும் இந்த இருப்பு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலையில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக, பஃபர் ஸ்டோரேஜ் எனப்படும் இடையக இருப்பில் வெங்காயத்தை வைத்திருப்பது அல்லது வெளியிடுவது என்ற முடிவை மத்திய அரசு எடுக்கிறது. 2023-24 ஆம் ஆண்டில் காரீஃப் மற்றும் ரபியில் உற்பத்தி குறைவு காரணமாக 20 சதவீதம் என்றளவுக்கு வெங்காயத்தின் விலைகள் அதிகரித்தன. விலைகளைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 40 சதவீத ஏற்றுமதி வரியுடன் அரசாங்கம் தனது நடவடிக்கையை தொடங்கியது. அப்படியான பல்வேறு நடவடிக்கைகள், உள்நாட்டில் நியாயமான நிலையான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்தன.

நடப்பு சூழலானது வெங்காயம் மட்டுமன்றி பல்வேறு காய்கறிகளின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. நாட்டின் பெரும்பகுதிகளில் தற்போது நிலவும் நீடித்த மற்றும் தீவிர வெப்ப நிலை, காய்கறிகளின் உற்பத்தியை நேரடியாக பாதித்துள்ளது. குறிப்பாக பரவலான பயன்பாட்டிற்கான தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் அதிகரிக்கவும் வழிவகுத்தது. எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதால், இந்த சூழல் மாறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

சற்று முன்