மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் தனது உரையில் அவர் தெரிவித்ததாவது., “புதிய வருமான வரி விதிப்பில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு 15 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 30 சதவீத வரி விதிக்கப்படும். இதன் மூலம், சம்பளம் பெறும் ஊழியர் ஆண்டுக்கு ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க முடியும்.
புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்துக்கான பிடித்தம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறும் சுமார் 4 கோடி பேருக்கு நிவாரணம் கிடைக்கும். 1961-இன் வருமான வரிச் சட்டம் ஆறு மாதங்களில் மறுஆய்வு செய்ய பட்ஜெட் முன்மொழிகிறது. வருமான வரி சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.