Homeஇந்தியாபிரதமர் மோடி கூறியது! 140 கோடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய இடம்தான் பாராளுமன்றம்.

பிரதமர் மோடி கூறியது! 140 கோடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய இடம்தான் பாராளுமன்றம்.

மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவையின் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அமிர்த காலத்தின் போது ஓம் பிர்லா, 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. தமது ஐந்தாண்டு கால அனுபவமும், உறுப்பினர்களின் அனுபவமும் இந்த முக்கியமான காலங்களில் அவையை வழிநடத்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களைவைத் தலைவருக்கு உதவும். மக்களவைத் தலைவரின் பணிவான குணம் மற்றும் அவரது ஆளுமை அவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவருக்கு உதவும்.

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைத் தலைவர் தொடர்ந்து புதிய வெற்றிகளைப் பெறுவார் என்று நம்புகிறேன். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மக்களவைத் தலைவர் பதவியை வகித்த பின்னர் மீண்டும் அவைத் தலைவராக முதல் முறையாக பல்ராம் ஜக்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது 17-வது மக்களவையை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 18-வது மக்களவையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை இன்று ஓம் பிர்லா பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவில்லை. ஓம் பிர்லா அவைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளார். ஓம் பிர்லா தமது தொகுதியில் நற்பெயர் பெற்றுள்ளார். தமது தொகுதியான கோட்டாவின் கிராமப்புறங்களின் சிறந்த சுகாதார சேவைகளை செயல்படுத்துவதில் ஓம் பிர்லா மிக அதிக அளவில் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமது தொகுதியில் விளையாட்டை அவர் ஊக்குவித்து வருகிறார்.

கடந்த மக்களவை, நமது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பொற்காலம். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, இந்திய நீதிச் சட்டம், இந்திய சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா என மாற்றத்துக்கான பல்வேறு முடிவுகள் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் ஓம் பிர்லாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள். 17-வது மக்களவையை அதன் சாதனைகளுக்காக எதிர்காலத்தில் இந்திய மக்கள் தொடர்ந்து போற்றுவார்கள். அவைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் புதிய நாடாளுமன்றம் அமிர்த காலத்தில் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

தற்போதைய அவைத்தலைவர் தலைமையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. அவையில் விவாதங்களை அதிகரிக்க அவைத்தலைவர், காகிதமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகளை மேற்கொண்டார். அதிக எண்ணிக்கையிலான நாடுகள் கலந்து கொண்ட ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகளின் தலைவர்களைக் கொண்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

நாடாளுமன்ற வளாகம் வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையமாகவும் அது திகழ்கிறது. அவையின் செயல்பாடு, நடைமுறைகள் பொறுப்புணர்வு ஆகியவை நமது நாட்டில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆழப்படுத்துகின்றன. 17-வது மக்களவையின் செயல்திறன் 97 சதவீதமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நனவாக்குவதன் மூலமும் 18-வது மக்களவையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். ஓம் பிர்லாவுக்கு மீண்டும் அதே முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் தமது செயல்பாடுகள் மூலம் நாட்டை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சற்று முன்