பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் புதிய அரசு பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ளது.இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக்க வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் அது தொடர்பான அறிவுப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக அரசு அமைய ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய தூணாக உள்ளது. தங்கள் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை வைத்து வருகின்றன.
குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். அதாவது ஆந்திராவுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை சிறப்பு நிதியாக கோரி வருகிறார். அதற்காகவே ஆந்திர அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதை ஒத்தி வைத்துள்ளார். சந்திரபாபு நாயுடு கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுமா அப்படியானால் பிற மாநிலங்களின் கோரிக்கைகள் குறித்து என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
அதே போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்டாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும்.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவுச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.