Homeஇந்தியாமகாராஷ்டிராவில் நண்டு பிடிக்க சென்ற சிறுவர்களுக்கும் நடந்த சோகம்.

மகாராஷ்டிராவில் நண்டு பிடிக்க சென்ற சிறுவர்களுக்கும் நடந்த சோகம்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள மலையில் நண்டு பிடிக்கச் சென்று வழி தவறிய ஐந்து சிறுவர்கள், பல தரப்பு மீட்புப் படையினரின் தேடுதல் முயற்சியால் 7 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

“ஆசாத் நகர்ப் பகுதியில் உள்ள தர்கா கல்லியைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் நண்டு பிடிப்பதற்காக மாலை 5 மணியளவில் மும்ப்ரா மலைப் பகுதிக்குச் சென்றனர். ஆனால், வழி தவறிச் சென்றதால் உதவி கோரி அலறினர்.

“அவ்வழியாகச் சென்ற சிலர் உதவ முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் உதவ முடியாததால் தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவித்தனர்,” என்று தானே நகராட்சிக் கழகத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் யாசின் தத்வி கூறினார்.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

“மீட்பு நடவடிக்கை சவாலான ஒன்றாக இருந்தது, ஏனெனில், மீட்புப் படையினர் இருளிலும் மழைக்கு மத்தியிலும் ஆபத்தான மலைப்பாங்கான பகுதியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக அதிகாலை 3 மணியளவில் சிறுவர்கள் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று யாசின் தத்வி கூறினார்.

ஐந்து சிறுவர்களில் பெரும்பாலோர் 12 வயதுடையவர்கள், மூன்று பேர் உடன்பிறந்தவர்கள் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சற்று முன்