Homeஇந்தியாபஞ்சாபில் மூடநம்பிக்கையின் காரணமாக, 30 வயது நபரை கொன்ற ஆசாமி.

பஞ்சாபில் மூடநம்பிக்கையின் காரணமாக, 30 வயது நபரை கொன்ற ஆசாமி.

பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மாசிஹ் என்ற நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் அவர் திடீரென சத்தமிட்டு அலறித் துடித்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், அதே பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜேக்கப் மாசிஹ் என்பவரை வீட்டிற்கு அழைத்து சாமுவேலுக்காக பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்படி தனது உதவியாளர்கள் 8 பேருடன் சாமுவேலின் வீட்டிற்குச் சென்ற மதபோதகர் ஜேக்கப், சாமுவேலின் உடலில் பிசாசு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிசாசை விரட்டுவதாக கூறி ஜேக்கப்பும், அவரது உதவியாளர்களும் சாமுவேலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலால் சாமுவேலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவரது குடும்பத்தினரிடம் ஜேக்கப் உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த தாக்குதலில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதோடு சாமுவேலின் உடலை அவரது குடும்பத்தினரே யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சாமுவேலின் தாய் மற்றும் அவரது மனைவி ஆகியோர், சம்பந்தப்பட்ட மத போதகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அடக்கம் செய்யப்பட்ட சாமுவேலின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத போதகர் ஜேக்கப் மற்றும் அவரது உதவியாளர்கள் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்