ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந்தேதி கற்பழித்து கொல்லப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் பரிசீலித்து வருகிறது.
இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பெண்களுக்கு எதிராக இதுவரை நடந்த குற்றங்களே போதும். தனது மகள், சகோதரிகளுக்கு எதிராக இந்த நிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சமூகம் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் சுயபரிசோதனை செய்வது அவசியம். பயத்தில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கான பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நாம் கடமைப்பட்டு உள்ளோம்.
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இந்த சமூகம் மறந்துவிட்டது. உண்மையை ஏற்றுக்கொள்ள மறந்து, கூட்டு மறதியை கையாளுகிறது. இந்த சமூகம் தன்னை நோக்கி சில கடுமையான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும் . தேசம் விழித்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.