திருமலை திருப்பதி ஏழுமலையான கோவில் ஆர்ஜித சேவா டிக்கெட் தொடர்பான அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீட்டை TTD ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளை மின்னணு டிப் செய்வதற்கான ஆன்லைன் மூலம் ஜூலை 20 ஆம் தேதி அதாவது இன்று காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள், ஜூலை 20 முதல் 22 வரை மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி லக்கிடிப்பில் ஒதுக்கப்படும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக அக்டோபர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை ஜூலை 23 அன்று மாலை 3 மணிக்கு TTD நிர்வாகம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீப அலங்கர சேவை டிக்கெட்டுகள் ஜூலை 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மெய்நிகர் சேவைகளுக்கான அக்டோபர் ஒதுக்கீட்டையும் அவற்றின் தரிசன ஸ்லாட்டுகளையும் ஜூலை 22 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடவுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அக்டோபர் மாதத்திற்கான அங்கபிரதட்சனம் டோக்கன்கள் ஒதுக்கீட்டை ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.
அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டை ஜூலை 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான அறை ஒதுக்கீடு ஜூலை 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் சேவை கோட்டா காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஸ்ரீவாரியின் வருடாந்திர பிரம்மோத்ஸவம் நடைபெறுவதால், அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சுப்ரபாத சேவை தவிர மற்ற அனைத்து சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சுப்ரபாத சேவையுடன் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கப்பிரதட்சணம் மற்றும் விர்ச்சுவல் சேவை தரிசன டிக்கெட்டுகள் அக்டோபர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.