தமிழ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் தடைசெய்துள்ளது.
உயர் தரத்துடன் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு, 10 நாட்களானாலும் கெடாமல் இருக்கும். ஆனால், அண்மையில் லட்டின் தரம், சுவை குறைந்துள்ளதாகவும் விரைவில் கெட்டுபோவதாகவும் பக்தர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
தரமான நெய்யைக் கொள்முதல் செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய், தேசிய அங்கீகார வாரியத்திற்கு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டது.
அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நெய்யில் காய்கறிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நெய் திருப்பி அனுப்பப்பட்டதுடன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தான தலைமை அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தார்.
லட்டின் தரத்துக்குச் சுத்தமான பசு நெய் முக்கியம். லட்டுக்கான மூலப் பொருள்களுக்காக செலவிடப்படும் 500 கோடி ரூபாயில் ரூ. 250 கோடி நெய்க்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களைப் பரிசோதிக்க வசதியாக, திருமலையில் அதிநவீன ஆய்வகமும் விரைவில் அமைக்கப்படும். அதற்காக வெளிநாடுகளில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு உலகக் புகழ்பெற்றதாகும். ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்குகின்றனர்.