உலக புகழ் பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக அன்னதானம், குடிநீர். பால் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இதேபோல் தங்கும் இட வசதியையும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அளித்து வருகிறது. இந்நிலையில் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் திருமலையில் இயங்கி வரும் கடைகளின் வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இந்த புகார் தேவஸ்தான நிர்வாகத்தின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து கடைகளில் அதிரடி சோதனை நடத்திய தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் நிர்ணயித்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தேவஸ்தானத்தின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் உள்ள கடைகளில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதையும் கண்டுபிடித்த தேவஸ்தான அதிகாரிகள் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
திருப்பதி திருமலையில் தேவஸ்தானம் நிர்ணயித்த விலைக்கே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது பக்தர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.