ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு ரவுடி குழுவினர் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் திட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கொலையில் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக தனிப்படை போலீசார் சந்தேகித்து, அவரை பிடிக்க முயற்சித்த போது, காவல்துறையினரை கண்டதும் சீசிங் ராஜா காரில் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே வழக்கறிஞர் சிவாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைதான சிவா வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வழக்கறிஞர் சிவா பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
காவல்துறையினர் தேடி வரும் சம்போ செந்தில் என்பவருக்கு வழக்கறிஞர் சிவா பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.