பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டியது. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் கடந்த 1ம் தேதி தீபம் ஏற்றும் மலை பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் மண்ணில் புதைந்தன. ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.மொத்தம் 7 பேரும் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. 3 நாள் மீட்பு பணிக்கு பிறகு அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தான் திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கேபிஒய் பாலா நேரில் சென்று பார்த்தார். அதன்பிறகு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை கேபிஒய் பாலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்கள் சேர்ந்த 4 குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் என்று மொத்தம் ரூ.2 லட்சத்தை கேபிஒய் பாலா வழங்கி உதவி செய்தார்.