காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 12.95 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர்திறக்கப்பட்டு வந்த நிலையில், இது 1000 கன அடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரி வருகிறது.
ஆனால், கர்நாடகாவில் மழை இல்லை: இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறியதாவது: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரைமழை இல்லை. தற்போது கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் மிக குறைந்த அளவிலேயே நீர் உள்ளது என்றும் இதை கொண்டே பெங்களூரு, மைசூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இப்படி இருக்கையில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என கர்நாடகா போதுமான நீரை திறக்க மறுத்து வருகிறது.
இப்படி இருக்கையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 99வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கர்நாடகா உரிய நீரை திறக்கவில்லை. பிப்ரவரி முதல் மே வரையிலான நீரை உரிய முறையில் திறக்கவில்லை. அத்துடன், இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஆனாலும், தண்ணீர் திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் செயல். ஆகவே, தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என வலியுறுத்தப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் மழை இல்லை என்கிற பழைய பல்லவியையே திரும்ப திரும்ப பாடி வருகிறது. இது தரப்பு வாதங்களை கேட்ட ஒழுங்காற்றுக்குழு, தமிழ்நாட்டிற்கு நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அதேபோல தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.