Homeதமிழ்நாடுஅதிமுகவின் போராட்டத்திற்கு சீமான் கட்சி ஆதரவு தெரிவிப்பு!

அதிமுகவின் போராட்டத்திற்கு சீமான் கட்சி ஆதரவு தெரிவிப்பு!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள என அந்தப் பகுதி முழுவதும் அதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். தனிநபரை தாக்கிப் பேசக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகளை அதிமுகவுக்கு காவல்துறை விதித்தது.அதிமுகவினரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவுத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சற்று முன்