Homeதமிழ்நாடுகள்ளச்சாராய வழக்கை பற்றி இபிஎஸ் பரபரப்பு பேட்டி? ஆளும் கட்சிக்கு சரமாரியான கேள்வி!

கள்ளச்சாராய வழக்கை பற்றி இபிஎஸ் பரபரப்பு பேட்டி? ஆளும் கட்சிக்கு சரமாரியான கேள்வி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனிடையே, இந்த விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடனடியாக கொடுக்கப்பட வேண்டிய Fomepizole என்ற விஷமுறிவு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும்” எனத் தெரிவித்திருநதார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அதற்கு விளக்கம் அளித்திருந்தார். அதாவது, Fomepizole விஷமுறிவு மருந்து தேவைக்கு அதிகமாகவே இருப்பதாகவும், 4.42 கோடி மருந்துகள் தயாராக இருப்பதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே சோகத்தில் இருக்கும் மக்களிடம் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசக் கூடாது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், மா. சுப்பிரமணியனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த செய்தியை கேட்ட உடனேயே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தேன். அப்போது, 34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம் வரையில், “மெத்தனால் விஷ முறிவு மருந்தான Fomepizole மருத்துவமனையில் இருப்பில் இல்லை” என்கிற வேதனையை நான் பகிர்ந்திருந்தேன். இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே என்னிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

நான் சுட்டிக்காட்டிய பிறகே, நேற்றைய தினம்தான் (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு, மும்பையில் இருந்து இன்று வரவழைக்கப்ட்டு, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. அதற்குள் 50 உயிர்களை நாம் இழந்துவிட்டோம். உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது திசை திருப்பி விடலாம் என நினைக்கும் திமுக அரசுக்கு நான் சவால் விடுகிறேன். ஜூன் 20-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு Fomepizole மருந்துகள் கையிருப்பில் இருந்தன என்பதற்கான ஆதாரத்தை வெளியிட அரசு தயாராக இருக்கிறதா?

ஜூன் 20-ம் தேதி விஷ முறிவு மருந்தான Fomepizole பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான Patient Case Sheet, Hospital Drug Inventory records மற்றும் TNMSC கையிருப்பு பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா? ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரைக் காக்க போர்க்கால சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டு, 54 உயிர்களை இழந்த பிறகும் கூட, வீண் விவாதத்தை அரசு செய்து வருகிறது. ஆகவே, எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சற்று முன்