மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வல்லுநர்களின் உரையுடன் பயிலரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிக வேலை செய்ததால் சுகப் பிரசவம் நிகழ்ந்தது. இப்போது காலமாற்றத்தால் பெண்களின் பணிச் சுமை குறைந்துள்ளது. இதனால் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் ஜீரோவை எட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுகப் பிரசவங்ன்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிற்போக்குத்தனமான கருத்தை தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தடைகள் பல தாண்டி, வெளியுலகத்தில் தனியே பயணிக்கும் பெண்களின் உழைப்பெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் பேசியுள்ள மா.சுப்பிரமணியனின் இந்த மலிவான கருத்து மிகுந்த கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளின்மை, கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் உண்டாகும் சிக்கல்கள், வயிற்றிலிருக்கும் சிசுவின் உடல் ஆரோக்கியம் போன்ற மிக முக்கிய காரணங்களை அவர் விட்டுவிட்டதாகவும், வீட்டு வேலை செய்யாததுதான் சிசேரியன் பிரசவங்களுக்கு காரணம் என்ற உங்கள் திராவிட மாடல் சிந்தனை வியப்பளிக்கிறது என்றும் வானதி சீனிவாசன் சாடினார்.
தொடர்ந்து பெண்களைக் கொச்சைப்படுத்துவதையும், கீழ்த்தரமாக பேசுவதையும், எள்ளி நகையாடுவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைவர்களின் எண்ண ஓட்டம் இப்படித்தானிருக்கும் என்றும் விமர்சித்த வானதி சீனிவாசன், “பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது மட்டும் தான் உடல் உழைப்பாகும் என்ற உங்களின் கருத்தானது, உங்கள் கட்சியின் பெண்ணியப் போராளியாகவும், எம்.பியாகவும் அயராது அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் கனிமொழிக்கும் பொருந்துமா என்பதையும் சற்று விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும்” என்றும் அவர் மா.சுப்பிரமணியனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.