கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 8 பேர் சரண் அடைந்த நிலையில், மேலும் 3 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதும் போலீசாரின் தொடர் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய பங்கு வகித்த பலரின் பெயர் வெளியானது. திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 17வது ஆளாக வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்த வைரமணி ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு சொந்த ஊர் வீரநல்லூர் சென்று பதுங்கி இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வீரநல்லூர் சென்ற தனிப்படை போலீசார் திருநெல்வேலியில் = வைத்து வைரமணியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வைரமணி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.