Homeதமிழ்நாடு25 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கு புதிய ஆட்கள் நியமிக்கப்படவிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம்...

25 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கு புதிய ஆட்கள் நியமிக்கப்படவிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேறும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110-ன்கீழ் பேசியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர்.

மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ‘நான் முதல்வன் திட்டம்’ மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 இலட்சத்து 6 ஆயிரத்து 459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 இலட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த இரண்டையும் சேர்த்து தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: வரும் ஜனவரி 2026ஆம் ஆண்டுக்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்” என்றார்.

சற்று முன்