தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். இங்கு தான் இவரது பழைய வீடு இருந்தது. இதை இடித்து தற்போது இவர் புது வீடு கட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
உணவு டெலிவரி நிறுவன உடையை அணிந்து வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனிடன் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனை ஏற்ற தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணிக்கு இந்த வழக்கு காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு வரவுள்ளது.