உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இந்த கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்குகளில் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சூழ்ந்து சரமாரியாக வெட்டியது. அதன்பிறகு பைக்குகளிலேயே அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது.
இதில் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவி்த்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. பௌத்த முறைப்படி உறவினர்கள், முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது