மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற் கூறு ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்குரைஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், தங்களது கோரிக்கை தொடா்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) மகாதேவனிடம் முறையிடப்பட்டது.
இந்த மனுவை தனி நீதிபதி ஒருவா் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து இன்று காலை காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடம் எங்கே ? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது, 15 அடி சாலையில் உள்ள இடத்தில் புதைக்க முடியாது.. அருகில் குடியிருப்பு இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஹர்தாஸ் சம்பவம் போல் வர வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது எனவும், 40 அடி சாலையாக இருந்தால் மக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள். உத்தரவு பிறப்பிக்கிறேன் என கூறினார்.
அப்போது அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, 2000 சதுர அடி தர தயாராக இருக்கிறோம் என அரசு தரப்பு வாதத்தை முன் வைத்தது. அப்போது, இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள் என்றும், நீதிபதியாக அல்ல சகோதரியாக சொல்கிறேன், வேறு இடத்தை கூறுங்கள்.. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. 2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகிறேன்” என்று கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
பெரம்பூரிலேயே 7,500 சதுர அடி கொண்ட நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் தரப்பு. உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது; நாளை பள்ளி திறக்க வேண்டும். அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 2000 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் என அரசு தெரிவித்துள்ளது.