மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் கூட்டணிக் கட்சிகளான தெலங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி வழங்கப்பட்டது. தனது ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கிறது என்பதால் அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அவற்றை தவிர, பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பெரிய அளவில் எந்த திட்டங்களும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்த பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டின் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை என்பது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுவதே திமுகவுக்கு பழக்கமாகி விட்டது. ஜவுளி பூங்காவை தமிழகத்துக்கு கொடுத்தது யார்? எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்து யார்? எல்லாம் மத்திய அரசு தானே. ஆனால் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மரங்களை வெட்ட சொல்லி கேட்டும் தமிழக அரசு செயயவில்லை. ஆனால் மத்திய அரசு எதுவும் செய்வதில்லை என பொய் பிரச்சாரத்தை மட்டும் செய்து வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை என திமுக கூறுகிறது. மத்திய பட்ஜெட் உரையை நன்றாக கவனித்தால், அதில் பாஜக ஆளும் மாநிலங்களின் பெயர்களும் இடம்பெறாதது தெரியவரும். மாநிலங்களின் பெயரை குறிப்பிட்டுதான் நிதி ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்நாடு பட்ஜெட்டிலும் தான் மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெறாது. அதை வைத்து தமிழக அரசை குறை சொல்லலாமா? என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.