2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக அரசு ஆத்திரத்தில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை.தமிழ்நாடு குறித்து எந்த சிந்தனையும் பாஜக அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை; அநீதி மட்டுமே உள்ளது.
பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யாமல் பெயரளவுக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் வரும் 27 ஆம் தேதி நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. நிதி ஆயோக் அமைப்பை சீரமைத்து மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.வரும் ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.