சென்னை எம்டிசி ஆயிரக்கணக்கான பேருந்துகளை சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ஏசி பஸ், டீலக்ஸ் போன்ற பேருந்துகளையும் இயக்கி வருகிறது. விரைவில் தாழ்தள பேருந்துகளும் சென்னை நகரில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வாங்கப்பட்டு டெப்போக்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தான் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. டபுள் டக்கர் பேருந்துகள் என்பது சென்னைக்கு புதிது அல்ல.. 1970 களில் சென்னையில் முதன் முறையாக இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 1980 களில் இந்த பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது.
பிறகு 1997 ஆம் ஆண்டில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. 18 ஏ வழித்தடத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் வரை 2008 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. ஆனால், வழித்தடத்தில் பாலங்கள் கட்டப்பட்டதாலும் மெட்ரோ பணிகள் போன்றவற்றாலும் இந்த பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது.அடுத்த ஆண்டு முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சாரத்தில் இயங்க கூடிய வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் சென்னை நகர கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் வாங்கப்பட உள்ளதாம்.
எந்த வழித்தடத்தில் ஓட வேண்டும்.. கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பதை எம்டிசி நிர்ணயிக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு தொகை என நிர்ணையித்து பேருந்தை இயக்கும் தனியாருக்கு எம்டிசி கொடுத்து விடும் என்றும் டிக்கெட் வசூலை எம்.டி.சியே பெற்றுக்கொள்ளும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.