Homeதமிழ்நாடுபகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள...

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று சென்னை வருகிறார் மாயாவதி.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எக்ஸ் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பகிர்ந்துள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் அவரது வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் கூடிய தலைவர் அவர். அவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இன்று (ஞாயிறு) சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்