கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் அவர், எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஈஷா மையத்தில் யோகா கற்க சென்றனர். பிறகு அங்கேயே தங்கிவிட்டார்கள். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்பறுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் நானும் என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான் என் மகள்களுடன் பேச முடியும் என கூறுகிறார்கள். எங்கள் மகள்களை மீட்டு தாருங்கள் என அந்த மனுவில் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மகள்களும் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் கூறுகையில் “பெற்றோர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள்” என்றனர். அதற்கு நீதிபதிகள், “நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகிவிட்டீர்களே, பிறகு ஏன் இதையெல்லாம் பொருட்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதி , ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து நீதிபதிகள் நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை. எனினும் ஈஷா யோகா மையம் மீது சந்தேகங்கள் உள்ளன. எனவே ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஆய்வு செய்து அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவை ஈஷா மையத்தில் அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். சமூக நலத் துறையினரும் போலீஸாரும் 6 குழுக்ககளாக பிரிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ஈஷா மையத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. காலை முதலே சர்ரென கார்களும் ஜீப்களும் சென்று வருவதால் ஒரே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை 7 மணி நேரமாக நீடித்து வருகிறது. ஈஷாவில் உள்ளவர்களை அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.