கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரத் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து பிலிகுண்டுலு பகுதி வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருப்பதால், அருவிகளிலும் மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.