பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நித்தியானந்தா சிக்கினார். தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார்.
அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, தனது கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்களை நித்தியானந்தா தரப்பு வெளியிட்டது.ஆனால், கைலசா எங்கே இருக்கிறது என்று இதுவரை அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தான், கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார்.
வாட்டிகன் எப்படி கத்தோலிக்க தலைநகராக உள்ளதோ அது போல இந்து தர்மத்தால் உலகை வளப்படுத்தும் தலைமையகம்தான் கைலாசா என சொல்கிறார் நித்தியானந்தா. ராணுவம் இல்லை, காவலர்கள் இல்லை.. வரி இல்லை.. வேத ஆகமங்களே அரசியல் அமைப்பு. யாராவது தவறு செய்துவிட்டால் ஜெயில் கிடையாது. பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் பிராயச்சித்தம் என்றும் முழுக்க முழுக்க நிதி உதவியில்தான் இயங்குவதாவும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைலாசத்தில் ஏழு அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா ஆகிய ஏழு இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இறையாண்மை பிரதேசங்களும், சுயாட்சி பிரதேசங்களும் உண்டு எனக் கூறியுள்ள நித்யானந்தா, இனி வரும் காலத்தில் வேறு சில இடங்களையும் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.