Homeதமிழ்நாடுகள்ளச்சாராயம் விவகாரம். பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு பேச்சு!

கள்ளச்சாராயம் விவகாரம். பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு பேச்சு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன்குமார் ஜடாவத், எஸ்பி- சமய்சிங் மீனா மற்றும் காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தேர்தலை மட்டுமே அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.அதிகாரிகளை மாற்றி விட்டால் மட்டும் போன உயிர்கள் திரும்பி வந்துவிடுமா? எந்த சம்பவம் நடைபெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடாவா? அதிகாரிகளை இடம் மாற்றுவதுதான் நடவடிக்கையா?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.போதையில்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது; நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது எனவும் பிரேமலதா கூறினார்.

சற்று முன்