Homeதமிழ்நாடுகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூபாய் 10 லட்சமா? இது சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதற்கு சமம். திருச்சி...

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூபாய் 10 லட்சமா? இது சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பதற்கு சமம். திருச்சி வேலுசாமி காரசார பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி என்பவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: நீங்களும் நானும் கொடுக்கும் வரிப்பணத்தை எடுத்து கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுப்பதற்குத்தான் இந்த அரசாங்கமா?

நான் தமிழக அரசாங்கத்தை பார்த்து ஒன்று கேட்கிறேன். பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற தன்னை ஏழ்மையில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற பெண் பிள்ளைகள், ஆண்கள் என எத்தனையோ பேர் கற்களை தூக்கி, மணலை அள்ளி வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்யும் போது எத்தனை பேர் தவறி விழுந்து இறக்கிறார்கள். அது போல் இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயை அரசாங்கம் கொடுத்திருக்கிறதா? நல்ல வகையில் பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக உழைக்கிறவர் செத்தால் 1 ரூபாய் கூட இந்த அரசாங்கம் கொடுப்பதில்லை.

ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அந்த குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் கொடுக்கும் என்றால் இது எதை காட்டுகிறது? தவறுகளை தூண்டுகிறதா அல்லது தவறுகளை குறைக்கிறதா? கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் யாரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இவர்கள் பணம் கொடுப்பது ஊக்கத்தொகையை கொடுப்பது போல் அல்லவா?

ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழும் மக்கள் தரும் வரிப்பணத்தை கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் தரும் என்றால் இதற்கு பேர் அரசாங்கம் இல்லை. மரம் வெட்ட போய் மாண்டவர்கள் பலர், பாறை உடைக்க போய் தவறி விழுந்து இறந்தவர்கள் பலர்.. இப்படிப்பட்டவர்களின் குடும்பத்தினரும் நிர்கதியாய்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் 10 லட்சம் இல்லை ஒரு 1000 ரூபாயை அரசாங்கம் கொடுத்திருக்கிறதா? இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது? நேர்மையாக உழைப்பவனுக்கு பாதுகாப்பு இல்லை. தவறு செய்பவர்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு என்ற நிலை வராதா? குடிப்பவர்கள் என்ன சொல்வார்கள், “நான் செத்தேனா என் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் வரும்” என சொல்லமாட்டாரா. இது நாட்டின் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் இல்லையா? எனவே ரூ 10 லட்சம் கொடுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் தனிப்பட்ட வேலுசாமியாகிய இந்த பாமரனின் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.

சற்று முன்