Homeதமிழ்நாடுஇனி கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்தால் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்....

இனி கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்தால் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஸ்டாலின் அறிக்கை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரையில் தெரிவித்ததாவது., எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள்? “சாத்தான்குளம் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசாரணை கேட்டீர்களே” என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார்.

மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அதிமுக அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சற்று முன்