தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்து வருபவர் யுவராஜா. இவர் கட்சி தலைமை மீது நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல், அதனைத்தொடர்ந்து தாமகா தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போன்றவை யுவராஜாவுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அத்துடன் மக்களவை தேர்தலில் தாமகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்ததில் இருந்தே யுவராஜா தமாகாவில் இருந்து விலகிவிடுவார் என தகவல்கள் வெளியாகின.
ஏனெனில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்த சில நிமிடங்களில், இளைஞரணி தலைவராக இருந்த யுவராஜா சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போதிலிருந்தே யுவராஜாவுக்கும் , தமாகா தலைமைக்கு இடையே பூசல் நீடித்து வந்துள்ளது.
இந்த நிலையில் தாமகா இளைஞரணி தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். தமாகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜா கட்சியின் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா , 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.