Homeதமிழ்நாடுகரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் திருச்செந்தூரில் பரபரப்பு.

கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் திருச்செந்தூரில் பரபரப்பு.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர். மேலும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடிவிட்டு, சுவாமியை வழிபாடுவது வழக்கம்.

அதன்படி, இன்று காலை கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்தபோது திடீரென அவர்களது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரை பகுதியில் கோவில் பணியாளர்கள் ஆய்வுசெய்தபோது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய அலுவலர் ரஞ்சித் தலைமையிலான அதிகாரிகள் குழு, திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கோவில் பணியாளர்கள் பிடித்து வைத்திருந்த ஜெல்லி மீன்களை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

இதனிடையே, ஆண்டுதோறும் வெயில் காலம் முடிகின்ற நேரத்திலும், மழைக்காலம் ஆரம்பமாகும் நேரத்தில் இந்த ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கும் என்றும், இந்த ஜெல்லிமீன்கள் கொட்டும் போது உடலில் அரிப்பு ஏற்படும் என்றும் மத்திய கடல் மீன்வள துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அதற்கு உடனடியாக முதலுதவி எடுத்துக் கொண்டால் மட்டும் போதுமானது என்றும், இதனால் பக்தர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

சற்று முன்