Homeதமிழ்நாடுதூத்துக்குடியில் கே.எஃப்.சி உணவகத்தின் பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து.

தூத்துக்குடியில் கே.எஃப்.சி உணவகத்தின் பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து.

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கே.எஃப்.சி என்ற உணவகமானது, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் அவர்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் போது, உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை, ஏற்கனவே பயன்படுத்தி மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

எனவே, 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முன்தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், பொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில், இருப்பு பதிவேட்டிலேயே குறிப்பிடப்படாமல் தனியாக மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் என்ற உணவுச் சேர்மத்தினை இருப்பு வைத்து, அதைப் பயன்படுத்தி, அனுமதியற்ற வகையில், பழைய எண்ணெயினை தூய்மைப்படுத்த பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்திட ஏதுவாகவும் கே.எஃப்.சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமானது இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த உத்தரவினை விலக்கிக்கொள்ளப்படும் வரை அந்த உணவகம் இயங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில், வளாகம் மூடி சீலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து, உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, மாநகரில் சில இடங்களில் பானிபூரி கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்கடைகளில் இருந்த பாணியில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வில், மூன்று பாணி உணவு மாதிரிகளும், 3 பானிபூரி மசாலா உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை, வரப்பெற்ற பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல்/ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:

1. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

2. உணவு எண்ணெய்க்கு அனுமதியற்ற உணவுச் சேர்மத்தினைக் கொண்டு, பழைய எண்ணெயைத் தூய்மைப்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், உணவகம் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.

சற்று முன்