கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சில இடங்களில் அடிக்கடி வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குறிப்பாக கோவை மாநகரில் தண்டவாளம் அருகே உள்ள பகுதியில் அதிக அளவில் திருட்டு நடந்து வந்தது.
இது தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தலைமையில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தனர் . தண்டவாளத்தை ஒட்டியுள்ள வீடுகளில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ‘ராடுமேன்’ என்று அழைக்கப்படும் பிரபல கொள்ளையன் மூர்த்தி(வயது 36), கோவையில் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் முகமூடி அணிந்து, பூட்டியிருக்கும் வீட்டின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து வருவதும், கோவையில் ஒரு இடத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், அவரை பிடிக்க வியூகம் அமைத்திருந்தனர். அவர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காத்த போலீசார், தேனியில் இருந்து கோவைக்கு மீண்டும் வந்த ‘ராடுமேன்’ மூர்த்தி மற்றும் அவருடைய கூட்டாளியான அம்சராஜன்(26) ஆகியோர் வந்த போது, அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது,திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் விருதுநகரில் பல கோடிக்கு மில், நிலம் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது.ரூ.4 கோடி மதிப்பில் ஒரு நூற்பாலை, ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ரூ.40 லட்சத்திற்கு இடம், மதுரையில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட், ரூ.12 லட்சத்திற்கு பைக் என வாங்கி குவித்துள்ளார். முறம்பு கிராமத்துக்கு சென்ற போலீசார், மூர்த்தியின் உறவினர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகை பைக் பறிமுதல் செய்யப்பட்டது.