ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நிதியுதவிகளும் ரேஷன் கார்டுகள் மூலமாகப் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் சில நேரங்களில் தங்களுடைய ரேஷன் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், உறுப்பினர் பெயரை நீக்குதல் போன்ற மாற்றங்களைச் செய்ய நினைக்கலாம். அதேபோல, மொபைல் நம்பர் அப்டேட், பயோ மெட்ரிக் அப்டேட் போன்ற அப்டேட்களும் செய்ய வேண்டியிருக்கும்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் இதுபோன்ற அப்டேட்களை செய்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை, ரேஷன் ஊழியர்கள் தொடர்பான புகார்களையும் பதிவு செய்யலாம்.
பயனாளிகளுக்கான ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் இன்று ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுன். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மணிக் கணக்கில் காத்துக் கிடந்து ரேஷன் பொருட்களை வாங்க முடியாத முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு அரசு தரப்பிலிருந்து அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு இந்த அங்கீகாரச் சான்று உதவியாக இருக்கும். இந்த சிறப்பு முகாம்களில் முதியோர்களும் மாற்றுத் திறனாளிகளும் அங்கீகாரச் சான்று வாங்கிக் கொள்ளலாம்.